2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!

“கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்” நம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள அரசு ஒதுக்கியுள்ளது.

அதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இது எப்படிச் சாத்தியமானது என்பதை, கேரளாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகவும், பாடக் குழுவிலும் பணியாற்றியவரான ராஜேந்திரன் தாமரபுரா அவர்களிடம் பேசினேன். “அரசுப் பள்ளியை நோக்கிப் பெற்றோர்களை வரவழைத்த கேரள அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு’ என்று தெரிவித்திருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் எனமுன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்களின்மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாட்டை மாநிலம் முழுக்கப் பரப்புவதற்கு அரசு நினைக்கிறது.

Leave a comment